Monday, May 7, 2012

பிரான்சின் ஜனாதிபதியாக 16ம் திகதி்க்குள் ஹோலண்டே பதவியேற்பு
[ செவ்வாய்க்கிழமை, 08 மே 2012, 12:49.47 மு.ப GMT ]
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிராங்காய்ஸ் ஹோலண்டே(வயது 57) வெற்றி பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து வரும் 16ஆம் திகதிக்குள் அவர் ஜனாதிபதி பொறுப்பை ஏற்க உள்ளார்.பிரான்ஸ் நாட்டில் மொத்த வாக்காளர்களில் 81% பேர் வாக்களித்தனர். பதிவான வாக்குகளில் 95% எண்ணப்பட்ட நிலையில் ஹோலண்டேவுக்கு ஆதரவாக 51.6% வாக்குகளும், சர்கோஸிக்கு 48.4% வாக்குகளும் கிடைத்தன.
ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு தான் செய்யப்போகும் முதல் வேலை, ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுக்குக் கடிதம் எழுதி, சிக்கன நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்வதுதான் என்று ஹோலண்டே குறிப்பிட்டார்.
சிக்கன நடவடிக்கைகளைவிட அரசின் நிதியைச் செலவிட்டு பொருளாதார நடவடிக்கைகளைத் தூண்டிவிடுவதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும் என்று தான் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் பிரான்ஸ் கடன் சுமையில் தத்தளிக்கிறது. பிரான்ஸில் வந்து குடியேறிய ஆப்பிரிக்க, ஆசிய மக்களை பிரெஞ்சு மக்களோடு எப்படி இணைத்து சமூக ஒற்றுமையை ஏற்படுத்துவது என்று தெரியாமல் அரசு விழி பிதுங்கி நிற்கிறது. தொழில்துறையில் தேக்க நிலை காணப்படுகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது.
விலைவாசி கட்டுக்கடங்காமல் உயர்ந்து நிற்கிறது. ஏழைகள், நடுத்தர மக்கள் செலவுகளை ஈடுகட்ட முடியாமல் தவிக்கின்றனர். அரசின் சிக்கன நடவடிக்கைகளால் அவர்கள் தான் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவேதான் சர்கோஸியை ஆட்சியிலிருந்து அகற்ற முடிவு எடுத்தனர்.
1981ஆம் ஆண்டு முதல் 1995ஆம் ஆண்டு வரை ஃபிரான்ஷுவா மித்தரான் ஜனாதிபதியாக இருந்தார். அவருக்குப் பிறகு இப்போது தான் சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இடதுசாரித் தலைவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். இது ஐரோப்பிய நாடுகளில் உள்ள இடதுசாரி ஆதரவாளர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளித்திருக்கிறது.
பாரீஸ் நகர வீதிகளில் மக்கள் எல்லாவிதமான கொடிகளையும் கையில் ஏந்திவந்து தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களிடையே பேசிய ஹோலண்டே அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அவர் பேசுகையில், சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரில் தங்களுடைய கழுத்தைப் பிடிக்கும் அரசுகளை வெளியேற்றத் தருணம் பார்த்துக் கொண்டிருக்கும் ஐரோப்பிய நாடுகளின் மக்கள், நாம் செய்திருக்கும் இந்தக் காரியத்துக்காக நமக்கு நன்றி தெரிவிக்கின்றனர் என்று கூறியபோது மகிழ்ச்சி ஆரவாரம் பெருக்கெடுத்தது.
நீங்கள் தந்துள்ள இந்த எழுச்சி ஐரோப்பிய நாடுகளில், ஏன் உலகம் முழுவதிலுமே அலைகளை ஏற்படுத்தி வருகிறது என்று பாராட்டினார்.
இதே முடிவைத் தான் ஜேர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் தேர்தல்களும் தரப்போகின்றன என்பது நிச்சயம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

No comments:

Post a Comment